குழந்தைகளை வளமாக்கும் நேர்மறை வாக்கியங்கள்

ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் ஓர் உணர்வு இருக்கிறது. நாம் மற்றவர்களிடம் பேசுகிற வார்த்தைகள் அவர்களை ஆற்றல் படுத்துவதாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. உயிர் இல்லாவிட்டாலும் உணர்வு மிக்கவையாக இருக்கின்றன. எனவே பிறரிடம் பேசுகிறபோது அவர்களை காயப்படுத்தாத வண்ணம் பேசவேண்டும். ஒருவர் தவறு செய்துவிட்டாலும் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வழிகாட்ட வேண்டும். இந்த வகையில் குழந்தைகளிடம் பேசுகிறபோது மிக கவனமாக பேசவேண்டும். அவர்கள் மனது கண்ணாடி போன்றது. ஒரு முறை உடைந்துவிட்டால் சேர்ப்பது கடினம்.
உன்னையே நீ நம்பு
இன்றைய காலகுழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது முக்கியமானது. பல குழந்தைகள் சிறிய தோல்விகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்துவிடுகிறார்கள். அந்த நிலையில் குழந்தைகள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை கொள்ள வைத்திட வேண்டும். அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளிடம் 'உன்னையே நீ நம்பு' என்ற வாக்கியத்தை சொல்ல வேண்டும்.
அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றி
குழந்தைகள் தினமும் எழுந்ததும், இந்த நாளுக்காக நன்றி, பெற்றோரே உங்களுக்கு நன்றி. சகோதர சகோதரிகளே நன்றி, இயற்கையே உங்களுக்கு நன்றி, என்ற வாக்கியங்களை சொல்லும் போது நன்றியுணர்வு நிறைந்தவர்களாக மாறுவார்கள். சிறு வயதில் இருந்தே கிடைக்கிற எல்லாவற்றுக்கும் எல்லா மனிதர்களுக்கும் நன்றி கூறும்போது எதை குறித்தும் குறை கூறாது கவலை படாமல் நன்றியுணர்வு நிறைந்தவர்களாக வாழ முடியும். நன்றியுணர்வு குழந்தைகளிடம் வந்துவிட்டால் வாழ்க்கையை நிறைவாக பார்க்கத் தொடங்குவார்கள்.
உன்னால் முடியும்
'உன்னால் முடியும்' என்ற வாக்கியத்தை குழந்தைகளிடம் பெற்றோரும் உறவினர்களும் சொல்ல வேண்டும். குழந்தைகள் கலந்துகொள்ளும் போட்டிகளில் இந்த வார்த்தைகளை சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். நம் பெற்றோர் நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்வார்கள்.
நான் உன் மீது அன்பு செலுத்துகிறேன்
'நான் உன் மீது அன்பு செலுத்துகிறேன்' என்று பெற்றோர் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். பல பெற்றோர் குழந்தைகளிடம், அன்பை வெளிப்படுத்தாமல் அவர்களுக்காக உழைக்கிறேன், அவர்களுக்காக ஓடுகிறேன் என்று சொல்லி குழந்தைகளோடு இருப்பதே இல்லை. அன்பை எதிர்பார்ப்பது எல்லா உயிரினங்களின் அடிப்படையான எதிர்பார்ப்பு. அந்த வகையில் குழந்தைகள் பெற்றோரின் அன்பை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுக்கும் பொருட்களைவிட, நான் உன்னை அன்பு செய்கிறேன். உன்னோடு நேரம் செலவிடுகிறேன் என்று சொல்வது, நாம் நமது பெற்றோரால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உணர்வை குழந்தைகளுக்கு கொடுக்கும்.