பூமி தினம் 2025: வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்

இந்த ஆண்டுக்கான பூமி தின கருப்பொருள், "நமது சக்தி, நமது கிரகம்" என்பதாகும்.
பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தவும், அடுத்த தலைமுறையினருக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலகளவில் பூமி தினம் (புவி தினம்) கொண்டாடப்படுகிறது.
காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ள பூமியில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, நிலையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான பூமி தினம் நாளை (22.4.2025) உலகளாவிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "நமது சக்தி, நமது கிரகம்" என்பதாகும். அதாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிற்கு மாறுவதற்கான கூட்டுப் பொறுப்பை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படும்படி வலியுறுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாற்றத்தை சரிசெய்வதில் தனிநபர் மற்றும் கூட்டு நடவடிக்கையின் சக்தியையும் இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.
நாம் வாழும் பூமியை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தவறிவிட்டோம். எனவே, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஆரோக்கியமான இடமாக பூமியை மாற்றவும் இந்த நாளில் முயற்சிகளை ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டியது அவசியம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மக்களுக்கு அறைகூவல் விடுவது என சம்பிரதாய நிகழ்வாக இருந்துவிடாமல், ஆக்கப்பூர்வமான பணிகளின் தொடக்கமாக இந்த நாள் அமையவேண்டும்.