வெளிநாட்டில் படிக்க ஆசையா..? சிறப்பான கல்வி தரும் நாடு எது...? - தெரிந்து கொள்வோம் வாங்க


வெளிநாட்டில் படிக்க ஆசையா..? சிறப்பான கல்வி தரும் நாடு எது...? - தெரிந்து கொள்வோம் வாங்க
x

வெளிநாட்டில் படித்தவர்களுக்கு, அனைத்து நிறுவனங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

சிலருக்கு தங்களின் மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், எந்த நாட்டில் படிப்பது?, சிறப்பான கல்வி தரும் நாடு எது?... என்பது போன்ற கேள்விக்கான பதிலை தேடிக்கொண்டிருப்போம். இதோ உங்களுக்கான ஆலோசனைகள்...

ரஷியா

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது ரஷிய பல்கலைக்கழகங்கள் மிகக் குறைந்த கட்டணங்களைக் கொண்டுள்ளன. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களுக்கு ரஷிய அரசாங்கம் பல்வேறு உதவித்தொகைகளை வழங்குகிறது.

பல ரஷிய பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு டிப்ளமோக்களை படிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. ஏனெனில், அவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டு முயற்சிகளில் பணியாற்றும் வாய்ப்பை பெறுகிறார்கள். ஒரு சர்வதேச மாணவர் ரஷிய டிப்ளமோ மற்றும் ஐரோப்பிய டிப்ளமோவை எளிமையாக பெற முடியும்.

அமெரிக்கா

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால், உலகப் புகழ்பெற்ற ஐவி லீக் (புகழ்பெற்ற 8 பல்கலைக்கழகங்கள்) கல்வி நிறுவனங்கள் முதல் புதுமையான யோசனைகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் வரை, நீங்கள் இங்கு கற்றுக் கொள்ளும் அனைத்தும் உங்கள் வாழ்க்கை அனுபவத்தை மெருகேற்றும்.

ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்கள். அதிக செலவு இருந்தபோதிலும், மாணவர்கள் பாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் வாழ விரும்புகிறார்கள். ஏனெனில், இரண்டு நகரங்களும் சிறந்த நகரங்களின் தரவரிசையில் உள்ளன.

ஜெர்மனி

ஜெர்மனி எப்போதும் வெளிநாட்டு மாணவர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. இங்கிருக்கும் பொது பல்கலைக்கழகங்களில் கல்விக்கட்டணம் மிக குறைவாகவே இருக்கும். தனியார் பல்கலைக்கழகங்களில் கூட படிப்புக்கு ஆகும் செலவு ஓரளவு பட்ஜெட்டுக்குள் தான் இருக்கும். ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற ஆராய்ச்சி மற்றும் நடைமுறைக் கற்பித்தலில் கவனம் செலுத்துகின்றன.

தைவான்

தைபே சமீபத்தில் உலகளவில் மாணவர்களுக்கு மிகவும் மலிவான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் குறைவாக இருப்பினும், கல்வியின் தரம் உயர்வாக இருக்கிறது. நீங்கள் உள்ளூர் மற்றும் அரசியல் வரலாறு மற்றும் ஒரு புதிய கலாசாரத்தின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிய முடியும்.

தேசிய தைவான் பல்கலைக்கழகம், தேசிய யாங் மிங் சியாவ் துங் பல்கலைக்கழகம், தேசிய செங் குங் பல்கலைக்கழகம், தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தேசிய சன் யாட்-சென் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தைவானில் உள்ள சில சிறந்த பல்கலைக்கழகங்கள்.

இங்கிலாந்து

இங்கிலாந்து பரந்த அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது. மேலும், கல்விக் கட்டணம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். மிக அதிகமாக இருந்தாலும், இங்கிலாந்தில் படிப்பதற்கான பிரதிபலனை வேலைவாய்ப்பில் உணரமுடியும். சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு மற்றும் கல்விச் செலவைக் குறைக்க பல்வேறு உதவித்தொகைகளை பல்கலைக்கழகங்களும், இங்கிலாந்து அரசாங்கமும் வழங்குகின்றன.

ஏன் வெளிநாடு..?

உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிப்பது என்பது மாணவர்களின் எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்தும் பயிற்சி அனுபவம். சிறந்த வழிகாட்டிகளிடம் இருந்து கற்றுக்கொள்வது, புதிய நண்பர்களை உருவாக்குவது, ஆராய்வது மற்றும் புதிய இடத்தில் வாழ்வது... என புதுமையான அனுபவத்தை வழங்குகிறது. வெளிநாட்டில் படித்தவர்களுக்கு, அனைத்து நிறுவனங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

1 More update

Next Story