பால்-தயிர்-மோர் பருக சரியான நேரம் தெரியுமா?


பால்-தயிர்-மோர் பருக சரியான நேரம் தெரியுமா?
x
தினத்தந்தி 16 Oct 2025 11:06 AM IST (Updated: 16 Oct 2025 11:29 AM IST)
t-max-icont-min-icon

பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பதுதான் நல்லது.

உணவுகள் மற்றும் பானங்களை சரியான நேரத்தில் உட்கொண்டால்தான் நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம். எந்த நேரத்தில் எவற்றை சாப்பிட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் எந்த நேரத்திலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் தொய்வு ஏற்படும். அது நோய்பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தின்படி இந்த மூன்றையும் உட்கொள்வதற்கான சரியான நேரம் குறித்து பார்ப்போம்.

* ஆயுர்வேதத்தின்படி பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பதுதான் நல்லது. உடல் சோர்வை நீக்கி ஆழ்ந்த தூக்கத்தை தரும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் பால் எளிதில் ஜீரணமாகாது. எனவே காலையில் பால் குடித்தால் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நீடித்திருக்கும். முதியவர்கள் மதிய வேளையில் பால் பருகலாம். ஆயுர்வேதத்தின்படி பால் ஜீரணமாவதற்கு தாமதமாகும் என்பதால் அதனுடன் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பால் உட்கொள்ளலாம்.

* ஆயுர்வேதத்தின்படி நண்பகலுக்கு முன்பாக தயிர் சாப்பிடுவது நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. அது குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் இருமல், சளி, நுரையீரல் சார்ந்த நோய், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தயிரை சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. ஆயுர்வேதத்தின்படி தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

* மோரை எந்த நேரத்திலும் பருகலாம். எனினும் மதிய உணவு சாப்பிட்டதும் பருகுவது நல்லது. மாலை மற்றும் இரவு வேளையில் மோர் பருகுவதாக இருந்தால் வானிலை மாற்றத்தை கவனத்தில் கொள்வது அவசியம். வயிறு சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் மோர் பருகலாம். நல்ல பலன் தரும்.

1 More update

Next Story