நாளை தீபாவளி பண்டிகை... கங்கா ஸ்னானம் செய்ய மறக்காதீங்க..!


நாளை தீபாவளி பண்டிகை... கங்கா ஸ்னானம் செய்ய மறக்காதீங்க..!
x

தீபாவளி அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்வதாக ஐதீகம்.

இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கங்கை. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாய கங்கை, பரமசிவனின் திருமுடியில் தங்கி பின்னர் வேகம் தணிந்து தீபாவளியன்று தான் பூலோகத்தில் பாய்ந்தது. அதனால் தான் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் என்பது மிகவும் முக்கியமானது. கங்கா ஸ்நானத்திற்கு கங்கைக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. அதனால், அன்று சாதாரணமாக வீட்டில் குளித்தாலே அது கங்கா ஸ்நானம் தான்.

தீபாவளி அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே மாறி புனிதத் தன்மை நிறைந்திருக்குமாம்.

தீபாவளியின் பிரதான அம்சமே எண்ணெய்க் குளியல்தான். தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் தான் எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்து வந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணிக்கும், 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி.

தீபாவளியன்று பிரம்ம முகூர்த்தத்தில் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். முடிந்தவர்கள் குளிர்ந்த நீரிலும் குளிக்கலாம். நம் முன்னோர்கள் ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு என்பார்கள். முடிந்தவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. சீயக்காய் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புத்தாடை அணிந்து, பலகாரங்களை படைத்து இறைவனை வணங்கிய பின் நம் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி ஆசி பெறவேண்டும். அன்று மாலை உங்கள் வீட்டிலும், வீட்டிற்கு அருகிலுள்ள சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள விளக்கேற்றி வழிபட வேண்டும். தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் கங்கா ஸ்நானம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது வாழ்வின் புது தொடக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரிடமும் சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியை பகிர்வோம். தீபாவளியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் குடும்பத்தோடு கலந்துகொண்டு இறைவனை வழிபடுவது நல்லது.

தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.. வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும்.தீபாவளி நன்னாளில் இல்லங்களில் விதவிதமான வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறுவதுபோல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் வெடித்து சிதறி இன்பம் பரவட்டும்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்:

அதிகாலை 04.30 முதல் 07.15 வரை

காலை 09.10 முதல் 10.20 வரை

புத்தாடை அணிய உகந்த நேரம்

அதிகாலை 04.30 முதல் 07.15 வரை

காலை 09.10 முதல் 10.20 வரை

பகல் 12.15 முதல் 02.15 வரை

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

மாலை 06.15 முதல் இரவு 08.16 வரை

1 More update

Next Story