எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க இருக்கிறீர்களா..? - இதை தெரிந்து கொள்ளுங்கள்

நிறைய மக்கள் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல் செலவை குறைப்பதற்கும் உதவும். அதனால் நிறைய மக்கள் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அப்படி, உங்களுக்கும் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
அவை இதோ.....
* எலெக்ட்ரிக் வாகனத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்களது தேவையை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அது உங்களது தேவைக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்பதைத் தெரிந்துகொண்டு மின்சார வாகனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* ஒருமுறை சார்ஜ் போட்டால் எவ்வளவு தூரம் அந்த வாகனம் பயணிக்கும் என்ற வரம்பை பார்க்க வேண்டும். உங்கள் தினசரி பயணத் தேவைகளை பொறுத்து இந்த வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். இத்துடன் அதிகபட்ச வேகம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளவும்.
* இப்போது பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் ஆயுள், சார்ஜிங் நேரம், விலை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் எவ்வளவு?, பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறதா? என்பதை சோதித்து பாருங்கள்.
* எலெக்ட்ரிக் வாகனங்களில் பிரஷ் மோட்டார், பிரஷ்லெஸ் மோட்டார் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் மோட்டார் வகைகள். பிரஷ்லெஸ் மோட்டார்கள் அதிக செயல் திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவை. அதேபோல மோட்டாரின் பவர் என்ன என்பதையும் சரிபார்க்கவும்.
* புதிய அம்சங்கள் என்று பார்க்கும்போது பிரேக் சிஸ்டம், டிஜிட்டல் திரை, ஜி.பி.எஸ்., மொபைல் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் பல மாடல்களில் கிடைக்கின்றன. சைடு ஸ்டாண்ட் அலாரம், ஆன்டி தெப்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளதா..? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் வாங்கும் வாகனத்தின் சேவை மையங்கள் குறித்து நன்கு விசாரிக்கவும். வீட்டுக்கு அருகில் சேவை மையங்கள் இருப்பது முக்கியம்.
* வாகனத்தை வாங்குவதற்கு முன்பாக நிச்சயம் ஒரு முறை ‘டெஸ்ட் ரைட்’ எடுத்துப் பாருங்கள். வாகனம் எப்படி செல்கிறது, அதன் செயல்திறன் ஆகியவற்றை நீங்களே உணர்ந்து சரி பார்க்கலாம்.