கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு


கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்:  ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு
x

பிராந்திய ஒற்றுமை மற்றும் டென்மார்க் இறையாண்மையை உறுதி செய்வோம் என ஊர்சுலா கூறியுள்ளார்.

பிரஸ்ஸல்ஸ்,

உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகள், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவின் அதிபர் கைது, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்கள் கொள்முதல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டி வரும் அமெரிக்கா, அடுத்து கிரீன்லாந்து மீதும் குறி வைத்துள்ளது.

கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன.

எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார். ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலில், டென்மார்க் மற்றும் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்க டிரம்ப் உத்தரவிட்டார். இது அந்நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுநடந்து சில மணிநேரத்தில், ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் பேசும்போது, வரி விதிப்புகள் அட்லாண்டிக் பெருங்கடல் நாடுகளின் உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலைமையை சீர்குலைய செய்து விடும் ஆபத்தும் உள்ளது.

நாங்கள் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களுக்கு முழு அளவில் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். பேச்சுவார்த்தையே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. டென்மார்க்கிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவுமுறை நீடிப்பதற்கான முயற்சிகளை கடந்த வாரமே நாங்கள் தொடங்கி விட்டோம். கிரீன்லாந்தின் இறையாண்மையை பாதுகாக்க ஐரோப்பா தொடர்ந்து ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என கூறினார்.

இதனை முன்னிட்டு, இன்று அவசரகால கூட்டம் ஒன்றை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிராந்திய ஒற்றுமை மற்றும் டென்மார்க் இறையாண்மையை உறுதி செய்வோம். அவையே சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகள் ஆகும். அவை, ஐரோப்பா மற்றும் சர்வதேச சமூகத்திற்கும் மற்றும் எல்லா வகையிலும் அத்தியாவசியம். இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என அவர் கூறினார்.

1 More update

Next Story