அமெரிக்கர்களுக்கு ஜாக்பாட்; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்

வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை குடிமக்களுக்கு பிரித்துக் கொடுக்க உத்தேசித்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.
வாஷிங்டன்,
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமான நடவடிக்கையாகவும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதும் வரி விதிப்பு என்றே சொல்லலாம். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், விதித்த வரி அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில நாடுகள் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் வரியைக் குறைத்துக்கொண்டன.
இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒரு தவணையாக $2,000 (ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளார். (2,000 அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில், 1,77,279 என்பது ஆகும்) பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை குடிமக்களுக்கு பிரித்துக் கொடுக்க உத்தேசித்துள்ளதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.
இது குறித்து டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில்,
வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள். நாம் தற்போது உலகிலேயே பணக்கார, மதிப்புக்குரிய நாடு ஆகும். அதிலும், கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல், பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக இருக்கிறோம். அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் வழங்கப்படும். அதேசமயம், இந்த நிதி அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்குக் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் அறிவிப்பால் அமெரிக்கர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






