குறி இந்த முறை தப்பாது; டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

ஈரானில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என எனக்கு தகவல்கள் வந்து சேர்ந்துள்ளன என்று டிரம்ப் கூறினார்.
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஈரானின் அரசு தொலைக்காட்சியில் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 2024-ம் ஆண்டு ஜூலையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அவருடைய காது பகுதியில் துப்பாக்கி குண்டு உரசி சென்றது. இந்த கொலை முயற்சியில் டிரம்ப் உயிர் தப்பினார்.
இந்த சூழலில், காயத்துடன் கூட்டத்தில் டிரம்ப் நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த முறை குறி தப்பாது என ஈரான் தெரிவித்து உள்ளது.
ஈரான் மக்கள் படுகொலையை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டும் வகையில் கூறினார். இது சர்ச்சையானது. இந்த நிலையில், டிரம்புக்கு ஈரான் மிரட்டல் விடும் வகையிலான தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், டிரம்ப் மீது 2024-ம் ஆண்டில் நடந்த தாக்குதலுக்கு ஈரானுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், ஈரானில் படுகொலைகள் நிறுத்தப்பட்டு விட்டன என்றும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என எனக்கு தகவல்கள் வந்து சேர்ந்துள்ளன என்றும் டிரம்ப் கூறினார். அதனை நாங்கள் சரிபார்ப்போம் என்றும் கூறியுள்ளார். இதனால், ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், அமெரிக்கா தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும் என்று ஈரானும் அச்சுறுத்தி வருகிறது.






