நன்றி கெட்டவர்கள்... 2-ம் உலக போரில் கிரீன்லாந்தை மீட்டதே நாங்கள்தான்: டிரம்ப் பரபரப்பு பேச்சு

2-ம் உலக போரில் 6 மணிநேர போரிலேயே ஜெர்மனியிடம் டென்மார்க் வீழ்ந்தது என டிரம்ப் பேசினார்.
டாவோஸ்,
டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்ட கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், உலகின் பாதுகாப்புக்கும், கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும் என அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் மார்க் ருத்தேவுடன் டிரம்ப் இன்று நடத்திய சந்திப்பு ஆக்கப்பூர்வ வகையில் அமைந்திருந்தது. கிரீன்லாந்து தொடர்பாக வருங்கால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக கட்டமைப்பு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். உண்மையில், ஒட்டுமொத்த ஆர்க்டிக் பகுதியையும் அது உள்ளடக்கி இருக்கும். இந்த முடிவு, முழுமை பெற்றால், அமெரிக்கா மற்றும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் அது சிறந்த ஒன்றாக இருக்கும் என சந்திப்புக்கு பின்னர் டிரம்ப் கூறினார்.
இதேபோன்று, கிரீன்லாந்து தொடர்பாக அவர் சுவிட்சர்லாந்தில் பேசியது பரபரப்பாகி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசும்போது, கிரீன்லாந்து மக்கள் மீதும், டென்மார்க் மக்கள் மீதும் நாங்கள் பெரிய அளவிலான மதிப்பை வைத்திருக்கிறோம். நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் சொந்த பூமியை பாதுகாப்பதற்கான கடமையை கொண்டுள்ளது.
உண்மை என்னவெனில், கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவை தவிர வேறெந்த நாட்டுக்கோ, கூட்டணியாக உள்ள நாடுகளுக்கோ திறன் இல்லை. நாங்கள் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள். மக்கள் புரிந்து கொள்ள கூட முடியாத சக்தி படைத்தவர்கள். 2 வாரங்களுக்கு முன் வெனிசுலாவில் அதனை அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றார்.
அவர் தொடர்ந்து, 2-ம் உலக போரில் 6 மணிநேர போரிலேயே ஜெர்மனியிடம் டென்மார்க் வீழ்ந்தது. தன்னையோ அல்லது கிரீன்லாந்தையோ பாதுகாக்க முடியாத அளவுக்கு முற்றிலும் தோல்வியை சந்தித்தது. அமெரிக்காதான், கடமையாக நினைத்து, எங்களுடைய படைகளை அனுப்பியது. பெரிய பொருட் செலவிலும் ஈடுபட்டது. டென்மார்க்கால் அதனை திரும்ப கைப்பற்ற முடியாத சூழல் இருந்தது. அது அவர்களுக்கே தெரியும்.
டென்மார்க்கிற்காக கிரீன்லாந்தில் நாங்கள் படை தளங்களை அமைத்தோம். டென்மார்க்கிற்காக போரிட்டோம். வேறு யாருக்காகவும் நாங்கள் போரிடவில்லை. டென்மார்க்கிற்காக, அதனை பாதுகாத்து கொடுப்பதற்காக போரிட்டோம். அது அழகிய ஒரு பனித்துண்டு. அதனை நிலம் என கூறுவதே கடினம். அது ஒரு பெரிய பனித்துண்டு. ஆனால், நாங்கள் கிரீன்லாந்தை எதிரிகளிடம் இருந்து மீட்டோம். போரில் நாங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றோம்.
நாங்கள் இல்லையென்றால், நீங்கள் எல்லோரும் ஜெர்மன் மொழியை பேசி கொண்டிருப்பீர்கள். ஜப்பானிய மொழியிலும் சிலர் பேசி கொண்டு இருப்பார்கள்.
போருக்கு பின்னர், கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் கொடுத்தோம். அதனை செய்ய நாங்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருந்திருப்போம்? ஆனால், அதனை செய்தோம். அவர்களிடமே திருப்பி கொடுத்தோம். ஆனால், இன்று அவர்கள் எப்படி நன்றி கெட்டவர்களாக உள்ளனர்? எங்களுடைய நாடும், உலகமும் இதுவரை இல்லாத பெரிய ஆபத்துகளில் சிக்கியிருக்கிறது. ஏவுகணைகள், அணுசக்தி, போருக்கான ஆயுதங்கள்... அதனை பற்றி நான் பேச கூட முடியாது என கூறினார். அவர் ரஷியாவை அச்சுறுத்தல் என குறிப்பிட்டபோதும், ரஷிய அதிபர் புதினோ, கிரீன்லாந்து விவகாரத்தில் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை என கூறினார்.






