உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ராணுவ நோக்கம் இல்லாத எரிசக்தி உட்கட்டமைப்புகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது என ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டாக கூறினார்.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரானது 4-ம் ஆண்டை நெருங்கி உள்ளது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைன் மீது ரஷியா கடந்த வாரத்தில் 1,100 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது என குற்றச்சாட்டாக கூறினார். இதன்படி, வான்வழியே 890-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியும், குறுகிய ரக, நடுத்தர ரகம் என பல்வேறு வகையான 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ராணுவ நோக்கம் இல்லாத எரிசக்தி உட்கட்டமைப்புகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடந்தன என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
எங்களுடைய மக்களுக்கு மின் இணைப்பு வசதி, வெப்பம் மற்றம் குடிநீர் விநியோகம் ஆகியவை கிடைப்பதற்காக இரவு பகலாக, பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ரஷியாவின் தொடர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வரும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர். அதற்கு முன்தினம் இரவில் நடந்த தாக்குதலில் தலைநகர் கீவில் மட்டுமே ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.






