காதல் கல்வி, ஊக்க தொகை... பலனற்று போன சீன அரசின் திட்டங்கள்; 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு

சீனாவில் கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அரசு அறிவுறுத்தியது.
பீஜிங்,
உலக அளவில் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது. பெரிய பரப்பளவு, இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் அந்நாட்டில் மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல் உள்ளது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவு கண்டு வருகிறது.
4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் சரிவடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் வாரியம் வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது.
2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து வந்துள்ளது.

சீன மக்கள் தொகை கடந்த ஆண்டிலும் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் 79.2 லட்சம் குழந்தைகள் பிறந்தன. 1.131 கோடி இறப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், 33.9 லட்சம் பேர் மக்கள் தொகையில் குறைந்துள்ளனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிலைமையில் சீனா உள்ளது.
எனினும், 2025-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் வருடாந்திர இலக்கான 5 சதவீத வளர்ச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், உள்நாட்டில் குறைவான நுகர்வு என்ற சூழலிலும், ஏற்றுமதியால் சீனா இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இதன்படி, 3 வயதுக்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் தெரிவித்தது. கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
திருமணம், காதல், குடும்பம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றி நேர்மறையான விசயங்களை கற்று தரும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, திருமணம் செய்து கொள்ளுங்கள். கையில் பணம் பெற்று கொள்ளுங்கள் என ஊக்க தொகைகளையும் அறிவித்தது. எனினும், அரசின் பல்வேறு திட்டங்களும் பெரிய அளவில் பலன் பெற்று தரவில்லை.






