வெனிசுலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை

வெனிசுலாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.
காரகாஸ்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். இது உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.
வெனிசுலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
தொடர்ந்து அந்த செய்தியில், வெனிசுலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன. அதனால், வெனிசுலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
எனினும், வெனிசுலா வெளியுறவு மந்திரி யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது என தெரிவித்து உள்ளார்.






