டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்ததா வெனிசுலா..? ரூ.37 ஆயிரம் கோடி எண்ணெய் அமெரிக்காவுக்கு வருகிறது

எங்களிடம் 5 கோடி எண்ணெய் பீப்பாய்கள் உள்ளன. அவற்றை எடுத்து கொள்ள முடியுமா? என்று டெல்சி கேட்டார்.
நியூயார்க்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். இது உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
எண்ணெய் வளத்திற்காக வெனிசுலா குறி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் டிரம்புக்கு எதிராக எழுந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். எனினும், இதுவும் டிரம்பின் முடிவே என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவின் நிலைமை பற்றி டிரம்பிடம் கேட்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, வெனிசுலா உண்மையில் சிறப்பாக பணியாற்றுகிறது. அந்நாட்டின் தலைமையுடன் நாங்கள் நன்றாகவே இணைந்து செயல்படுகிறோம். அது எப்படி வேலை செய்ய போகிறது என நாம் எல்லோருமே பார்க்க போகிறோம் என்றார்.
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சியுடன் டிரம்ப் பேசியுள்ளார். அதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், அவர் நல்ல முறையில் பேசுகிறார். எங்களிடம் 5 கோடி எண்ணெய் பீப்பாய்கள் உள்ளன. அவற்றை எடுத்து கொள்ள முடியுமா? என்று டெல்சி என்னிடம் கேட்டார்.
அதற்கு நான், நிச்சயம். எங்களால் அது முடியும் என்றேன். அதன் மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடியாகும். எண்ணெய் பீப்பாய்கள் தற்போது அமெரிக்காவிற்கு வந்து கொண்டிருக்கின்றன என்றார். இதனால், வெனிசுலாவின் வளங்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சூழல் காணப்படுகிறது.






