ஸ்பெயின் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; 100 பேர் காயம்

ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. ரெயில் தடம் புரண்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்தது என சிலர் கூறினர். ரெயிலுக்குள் புகையும் பரவியுள்ளது என சில பயணிகள் தெரிவித்தனர். அதிவிரைவு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயம் அடைந்தனர். ஒரு ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். இதுபற்றி ஸ்பெயின் போக்குவரத்து மந்திரி ஆஸ்கார் புவென்ட் கூறும்போது, ரெயில் விபத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு ரெயிலின் முதல் 2 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு உள்ளன என்றார்.
பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் விபத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் சம்பவத்திற்கு ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.






