5.25 லட்சம் நாய் கடிகளா, தாங்குமா தமிழ்நாடு?

எந்த நாய் கடித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சென்னை,
இந்தியாவில் இப்போது நிலவி வரும் தெருநாய் தொல்லை பற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் சுப்ரீம் கோர்ட்டில் 3 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடெங்கும் தெருக்களிலும், பொது இடங்களிலும் சுற்றித்திரியும் தெருநாய்களால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாய் கடிக்கு உடனே சிகிச்சை பெறாவிட்டால் ரேபிஸ் நோய் வந்து, மரணம் என்பது நிச்சயம். ஆக நாய் கடி என்பது சாதாரணமானதல்ல. அது தெருநாய் கடித்தாலும், செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்தாலும் உடனடியாக மருத்துவரிடம் போகவேண்டியது கட்டாயமாகும். தமிழ்நாட்டில் இப்போது தெருநாய்களை போல, வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
வளர்ப்பு நாய்களிடம் தன்னிலை மறந்து அளவளாவும்போது மன அழுத்தம் குறையும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. அதேபோல வளர்ப்பு நாய்கள் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும், எஜமானருக்கு விசுவாசமாகவும் இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் தெருநாய் கடித்தால் எவ்வளவு ஆபத்து இருக்கிறதோ, அதுபோல முறையான தடுப்பூசி போடப்படாத வளர்ப்பு நாய்களிடமும் ஆபத்து இருக்கிறது. ஆகவேதான் வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக கூறப்படும் ஆலோசனையாகும். தமிழ்நாட்டில் நாய் கடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது நடப்பாண்டு இதுவரை மட்டும் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேலானவர்களுக்கு நாய் கடிக்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல நாய் கடியினால் ரேபிஸ் நோய் வந்து 29 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 43 பேர் ரேபிஸ் நோய்க்கு உயிரிழந்திருந்தனர். நாய் கடித்தால் ரேபிஸ் இம்யுனோ குளோபுலின் என்ற ஊசி மருந்தும், ஏ.ஆர்.வி. என்று கூறப்படும் ரேபிஸ் நோய் தடுப்பூசி 4 தவணைகளும் போட்டால்தான் ரேபிஸ் நோய் வராது என்ற உறுதியுடன் இருக்கமுடியும். சமீபத்தில் கோயம்புத்தூரில் ரேபிஸ் நோய் தடுப்பூசி பற்றி பொதுமக்களிடம் எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது?, நாய் கடித்தவுடன் உடனடியாக சிகிச்சைக்கு செல்பவர்களின் அளவு எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இவை இரண்டுமே மிக குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் தடுப்பூசியை, நாய் கடித்தவுடன் போட்டுவிட்டு தொடர்ந்து 3, 7, 28-ம் நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு தவணையாக போடவேண்டும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் நாய் கடித்தவுடன் வந்து தடுப்பூசி மருந்தை போடுகிறார்களே தவிர, மொத்தமாக போடவேண்டிய 4 தவணைகளையும் சேர்த்து போட்டு முடிப்பதில்லை. ரேபிஸ் நோய் உள்ள நாய்கள் கடிக்கவேண்டும் என்பதில்லை, நகங்களால் பிராண்டினாலோ அல்லது ஏதாவது தோல் உறிந்த இடத்தில் நாக்கால் நக்கினாலோ ரேபிஸ் நோய் வரும் ஆபத்து இருக்கிறது. எனவே எந்த நாய் கடித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருக்காமல் தனியார் ஆஸ்பத்திரிக்குத்தான் செல்லவேண்டும் என்றல்ல, கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் உள்ள 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய் கடிக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யுனோ குளோபுலின் மருந்து தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக அங்கு போய் சிகிச்சை பெறவேண்டும் என்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.






