ஏ.டி.எம். கட்டணத்தை உயர்த்துவதா?


ஏ.டி.எம். கட்டணத்தை உயர்த்துவதா?
x
தினத்தந்தி 3 April 2025 12:55 AM (Updated: 3 April 2025 2:02 AM)
t-max-icont-min-icon

ஜனவரி மாத கணக்குப்படி, இந்தியா முழுவதும் 2.57 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன.

மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களது மாதச்சம்பளம் மட்டுமல்லாமல், போனஸ் போன்ற இதர பணப்பட்டுவாடாவும் வங்கிகளிலேயே செலுத்தப்படுகிறது. வங்கிகளில் பணம் எடுக்கவும், போடவும் பெரிய கூட்டம் இருந்த நிலையில், ஆங்காங்கு ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவத்தொடங்கிய பிறகு வங்கிகளில் கூட்டம் குறைந்தது. பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் மக்கள் ஏ.டி.எம்.களுக்கே செல்ல தொடங்கினர்.

ஏ.டி.எம்.மால் கிடைக்கும் பெரியபலன் என்றால், தங்கள் தேவைக்கு மட்டும் எடுக்க முடிவதால் மீதி பணத்தை சேமித்து வைக்க முடிந்தது. இதனால் மக்களின் சேமிப்பும் உயர்ந்து வருகிறது. ஏ.டி.எம்.களால் வங்கிகளிலும் இந்த சேவைகளில் ஊழியர்களுக்கு இருந்த பணிச்சுமை குறைந்து மற்ற சேவைகளில் அதாவது, கடன் வழங்குவது போன்ற சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. கடந்த ஜனவரி மாத கணக்குப்படி, இந்தியா முழுவதும் 2.57 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 29,540 ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. ஏ.டி.எம்.களை அதிகமாக நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர், இல்லத்தரசிகள் குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். ஆக ஏ.டி.எம்.கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு இன்றியமையாத சேவையாகிவிட்டது. இவ்வாறு ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான சேவைகளில் சில குறிப்பிட்ட தடவைகளுக்கு மட்டும் கட்டணம் இல்லையென்றும், அதற்கு மேல் பணம் எடுக்கும்போது கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதில் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாமல், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம் பயன்படுத்தப்பட்ட வங்கிக்கு இதுவரையில் ரூ.17 கட்டணமாக கொடுத்து வந்தது. அந்த தொகை இப்போது ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல பணசேவை அல்லாமல் இருப்பை சரிபார்ப்பது போன்ற மற்ற சேவைகளுக்கு இதுவரையில் கணக்கு வைத்திருந்த வங்கி, ஏ.டி.எம். பயன்படுத்தப்பட்ட வங்கிக்கு தன் வாடிக்கையாளருக்காக ஒவ்வொரு முறையிலும் இதுவரை கொடுத்து வந்த ரூ.6, இப்போது ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணமும் வருகிற மே 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட இருக்கிறது. இப்போது ஒவ்வொரு வாடிக்கையாளரும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதாமாதம் 5 முறை பணபரிமாற்றங்களை கட்டணமின்றி செய்துகொள்ளலாம்.

இதுபோல மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் பெருநகரங்களாக இருந்தால் 3 பரிமாற்றங்களும், மற்ற இடங்களில் 5 முறையும் இலவசமாக பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். அதற்குமேல் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் இப்போது வசூலிக்கப்படும் ரூ.21 கட்டணம், இனி ரூ.23 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டாலும், படிப்பறிவில்லாத ஏழை-எளிய கிராமப்புற மக்களும் முதியோர், பெண்களும் ஏ.டி.எம்.களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வீட்டுத்தேவைக்கு குறைந்த அளவு பணம் எடுப்பவர்களும், வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு வைத்திருப்பவர்களும் பெரும்பாலும் ஏ.டி.எம்.களைத்தான் சார்ந்திருப்பதால், இந்த கட்டண உயர்வை சற்று நிறுத்திவைக்கலாமே என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அன்றாட தேவைக்காக ரூ.100, ரூ.200 என்று பணம் எடுப்பவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ.23 வசூலிக்கப்பட்டால் அவர்கள் சீக்கிரம் பணம் இல்லாமல் தவிக்கும்நிலை ஏற்பட்டுவிடும். வங்கிகளுக்கு நிறைய லாபம் கிடைத்துவரும் சூழ்நிலையில், இதுபோன்ற சாதாரண மக்களுக்கான சேவைக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதை தவிர்க்கலாம் என்பது பரவலான வேண்டுகோளாக இருக்கிறது.


Next Story