254 பொருட்களுக்கு வரியை குறைத்த டிரம்ப்

நமது பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
80 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த புகழ்பெற்ற சிரிப்பு நடிகரும், எழுத்தாளருமான டபிள்யூ.சி. பீல்ட்ஸ் கூறிய முதுமொழிகள் இப்போதும் பல நிகழ்வுகளுக்கு மேற்கோளாக கூறப்படுகின்றன. ஏதாவது ஒரு முயற்சியில் நீ முதலில் வெற்றி பெறவில்லையென்றால், முயற்சி செய், மீண்டும் முயற்சி செய். அப்படியும் வெற்றி பெறவில்லையென்றால் அதைவிட்டு வெளியே வந்துவிடு. அதை விட்டுவிட்டு அதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் முட்டாளாக இருக்காதே என்று அவர் சொன்னதை, இப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்பற்றியுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவேன் என்று பிரகடனம் செய்து அந்த வாசகங்கள் கொண்ட தொப்பியையே எப்போதும் அணிந்துவருகிறார்.
அமெரிக்காவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். அந்தவகையில், ஒரு பக்கம் மோடி என் நண்பர் என்று கூறிக்கொண்டே, மறுபக்கம் முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துவிட்டு, பின்பு இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அந்த பணத்தை வைத்துக்கொண்டுதான் ரஷியா, உக்ரைன் போருக்கு பயன்படுத்துகிறது என்று கூறிவிட்டு இந்தியா மீது மேலும் 25 சதவீத அபராத வரியை விதித்தார். இதனால் இந்தியா 50 சதவீத வரிக்கு உள்ளாகியுள்ளது. இப்போது ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
இந்தநிலையில், இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததால் நமது பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கர்கள் பெரிதும் விரும்பி குடிக்கும் காபி விலை கூட 20 சதவீதம் உயர்ந்துவிட்டது. காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியில் இருந்து அன்று பயன்படுத்தும் அனைத்து உணவு பொருட்களின் விலையும் அதிகரித்ததால் அமெரிக்காவில் வாழும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.பாங்க் ஆப் அமெரிக்கா கூட அமெரிக்காவில் மாத வருமானம் பெற்று வாழ்பவர்கள் தங்கள் வருமானத்தில் 95 சதவீதத்தை வீட்டு வாடகை, பெட்ரோல், மளிகை சாமான்கள், குழந்தை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு செலவுகளுக்காக ஒதுக்கவேண்டியது இருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளது.
இந்த விலைவாசி உயர்வு காரணமாகத்தான் நியூயார்க் மாநகராட்சி மேயர் தேர்தல் மற்றும் வெர்ஜீனியா, நியூஜெர்சியில் நடந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியடைந்து ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆக மக்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்துகொண்ட டிரம்ப் இப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.8,860 கோடி மதிப்புள்ள 229 விவசாய பொருட்கள் உள்பட 254 பொருட்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை ரத்துசெய்துள்ளார். மேலும் இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதாலும் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதில் காபி, டீ, மிளகு, இஞ்சி, மஞ்சள், மசாலா பொருட்கள் போன்ற பல உணவுப்பொருட்கள், முந்திரி, தேங்காய் மற்றும் கொய்யா போன்ற பழவகைகளும் அடங்கும். மொத்தத்தில் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை தொட்டால், அதன் விளைவு வாக்குகளில் பிரதிபலிக்கும் என்பதை டிரம்ப் நன்றாக புரிந்துகொண்டார்.






