இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் வஜ்ராயுதம்

ஈட்டி ஏவுகணைகள் எதிரிகளின் டேங்குகளை மிக துல்லியமாக குறிவைத்து அழிக்கக்கூடிய வல்லமை படைத்தது.
தந்தி டி.வி.யின் “பாட்காஸ்ட்” என்பது, நாளிதழ்களில் வந்த ஒரு குறிப்பிட்ட முக்கியமான செய்தியை ஆழமாக ஆராய்ந்து அதை நேயர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில் மிக விளக்கமாக அறிவிக்கும் அற்புதமான நிகழ்ச்சியாகும். பாட்காஸ்ட் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு தெளிவான புரிதலை உருவாக்குகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அனைத்து நாளிதழ்களிலும் அமெரிக்கா, இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்வது பற்றிய செய்தி வெளிவந்து இருந்தது. ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானத்துக்காக ரூ.8,900 கோடி மதிப்பில் 113 என்ஜின்கள் வாங்குவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் தொடர்ச்சியாக இப்போது ரூ.406 கோடி மதிப்பிலான ஜாவெலின் ஏவுகணை என்று கூறப்படும் ஈட்டி ஏவுகணைகள் மற்றும் ரூ.824 கோடி மதிப்பிலான எக்ஸ்காலிபர் எறிகுண்டுகளை இந்தியா வாங்க உள்ளது. இந்த 2 ஆயுதங்களும் சாதாரணமானவை அல்ல. புராணங்களில் அசுரர்களின் பலத்தையும், தேவர்களின் பலத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட மிக பலம்வாய்ந்த வஜ்ராயுதம் என்ற பெயரில் இந்திரன் கையில் இருக்கும் ஆயுதத்தை சொல்வார்கள். இப்போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கப்போகும் இந்த இரு தளவாடங்களும் இந்திய ராணுவத்தின் வஜ்ராயுதமாகப்போகிறது. இதுகுறித்து தந்தி டி.வி.யில் மிக விளக்கமாக கூறப்பட்டது.
இந்த ஈட்டி ஏவுகணைகள் எதிரிகளின் டேங்குகளை மிக துல்லியமாக குறிவைத்து அழிக்கக்கூடிய வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையையும் அப்படியே இந்தியா வாங்கப்போவதில்லை. அதாவது அமெரிக்கா முதலில் இந்த ஏவுகணையையும் அது சார்ந்த உபகரணங்களையும் வழங்கும். அதன் உண்மையான திறனை இந்தியா சோதனை செய்து சரி என்று தோன்றினால் மட்டுமே வாங்கிக்கொள்ளும். அதாவது ஒரு புது காரை வாங்கும் முன்பு டெஸ்ட் டிரைவ் போவார்கள் அல்லவா? அதுபோல தான் இது. இந்த ஈட்டி ஏவுகணையை ராணுவ வீரர்கள் தங்கள் தோளில் சுமந்து கொண்டு சென்று சிறு இடத்தில் இருந்து ஏன் பதுங்கு குழிக்குள் இருந்து கூட ஏவ முடியும். உக்ரைன் போரில் இந்த ஈட்டி ஏவுகணைகளை வைத்துத்தான் பல ரஷிய டேங்குகள் வீழ்த்தப்பட்டன.
அடுத்து இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்போகும் எக்ஸ்காலிபர் எறிகுண்டுகள் 155 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகளாகும். அந்த எறிகுண்டுகள் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இலக்கையும் துல்லியமாக தாக்கும். இந்த குண்டுகளை வைத்து சுடுவதற்கு தேவையான ஜி.பி.எஸ். மற்றும் இன்டர்னல் நேவிகேஷன் போன்ற கருவிகளும் சேர்த்து கொடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல் அந்த எக்ஸ்காலிபர் எறிகுண்டுக்குள் இருக்கும் குட்டி சென்சார் ஜி.பி.எஸ். பழுதானால் கூட இன்டர்னல் நேவிகேஷன் சரியாக இலக்கை கண்டுபிடித்து உதவி செய்து தாக்க வைக்கும். இந்த எக்ஸ்காலிபர் எறிகுண்டுகள் மலைகளுக்குள் வளைந்து போகும். மறைந்துள்ள பதுங்கு குழிகளுக்குள்ளும் போகும். ஆக இமயமலையில் பதுங்கி இருந்து தாக்கும் பயங்கரவாதிகளை தாக்க இது பெரிதும் உதவும். இந்த 2 ஆயுதங்களும் குறி வைத்தால் இரை விழும் என்பது போல, ஏற்கனவே வீர தீர புஜபல பராக்கிரமத்துடன் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு கூடுதல் கைகள் போல செயல்படப்போகிறது.






