கைநழுவிப்போன தென்கொரிய தொழிற்சாலை

தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை சந்திரபாபு நாயுடு கொத்திக்கொண்டு போய்விடுகிறார்.
அண்டை மாநிலமான ஆந்திரா, தமிழ்நாட்டோடு அனைத்து வகையிலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. கல்வி, தொழில், மருத்துவம் என எதை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டுக்கு சவாலாக விளங்குவது ஆந்திராதான். தகவல் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட, ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். தொழில் துறையிலும் இப்போது ஆந்திராவில் வேகம் தெரிகிறது. அதிலும் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தொழில் வளர்ச்சி குதிரை பாய்ச்சலில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக அவருடைய மகன் நாரா லோகேஷ் துடிப்புடன் இருக்கிறார்.
தொழில்துறை முன்னேற்றத்தில் சந்திரபாபு நாயுடு கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதே நிறைய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தார். இப்போது பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டோடு கடும் போட்டியில் இருக்கிறார். அவருக்கு மிகவும் சாதகமான ஒன்று என்றால், 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசாங்கத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அச்சாணியாக இருக்கிறார். எனவே அவர் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. அதற்கு ஒரு சிறிய உதாரணம், கூகுள் நிறுவனம் மற்றும் அதானி நிறுவன முதலீடுகள்தான். கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கூட, அந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தரவு மையம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 855 கோடி முதலீட்டில் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில்தான் தொடங்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு வெளியே செய்யப்படும் மிகப்பெரிய முதலீடு இது என்று சுந்தர் பிச்சையே சொல்லியிருக்கிறார். புதிய நிறுவனம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களையும் சந்திரபாபு நாயுடு கொத்திக்கொண்டு போய்விடுகிறார். தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தென்கொரிய நாட்டை சேர்ந்த தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் ஹூவாசிங் காலணி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,720 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு தொழிற்சாலையை தொடங்கப்போவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இது மிகவும் பெருமைக்குரிய நிறுவனமாக கருதப்பட்டது.
தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இந்த தொழிற்சாலையை தொடங்கலாம்? என்று இடம் தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் எங்கும் இல்லை தமிழக எல்லையையொட்டியுள்ள முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற குப்பம் தொகுதியில் இந்த தொழிற்சாலை தொடங்கப்படும் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் முதல் கட்டமாக 100 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஒரு ஏக்கர் ரூ.99 என்ற விலையில் 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஆந்திர அரசு கொடுத்துள்ளது. ஆக இந்த தென்கொரிய தொழிற்சாலை தமிழ்நாட்டை விட்டு கைநழுவி போய்விட்டது. ஆந்திராவில் நிலம் விலை மார்க்கெட்டிலேயே மிக மிக குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் கேட்ட இடங்களில் நிலத்தின் விலை மிகவும் அதிகம். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் தமிழ்நாட்டை விட்டுவிட்டு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள். இதுமட்டுமல்லாமல் மின்சாரமும் சலுகை விலையில் வழங்கப்படும் என்று ஆந்திர அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற காரணங்களால் மற்ற தொழிற்சாலைகளும் சென்றுவிடாமல் தடுக்க நமது தூண்டிலில் சரியான இரையைப்போட்டு தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்கவேண்டும்.






