மதிப்பு இழக்கும் ரூபாய்


மதிப்பு இழக்கும் ரூபாய்
x
தினத்தந்தி 3 Dec 2025 4:22 AM IST (Updated: 3 Dec 2025 4:34 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது

இந்தியாவுக்கு பணம் ரூபாய் என்பதுபோல, இங்கிலாந்துக்கு பவுண்ட், சீனாவுக்கு யுவான் என ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு பணம் இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகங்களை அனைத்து நாடுகளும் பொதுவாக அமெரிக்க டாலரில்தான் மேற்கொள்கின்றன. ஆக ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு இணையாக அதன் மதிப்பு எவ்வளவு என்பதை பொறுத்துதான் இருக்கிறது. அதாவது, ஒரு டாலரை வாங்கவேண்டுமென்றால் அந்தந்த நாட்டின் பணத்தில் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை அளவீடாக வைத்துதான் அந்த பணத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. தொடக்க காலங்களில் அமெரிக்க டாலருக்கு சற்று இணையான மதிப்பிலேயே இந்திய ரூபாய் இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.3 ஆக இருந்தது. அதன்பிறகு 1982-ம் ஆண்டு வரை ஒற்றை இலக்கத்திலேயே ரூபாயின் மதிப்பு இருந்தது. குறிப்பாக 17 ஆண்டுகள் அதாவது 1966-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை டாலருக்கு இணையாக இந்திய ரூபாய் ரூ.7-ல் இருந்து ரூ.9.46 வரைதான் இருந்தது. 1983-ம் ஆண்டு முதல் இரட்டை இலக்கத்துக்கு தாவிய ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென மதிப்பிழக்கத் தொடங்கி 2012-ல் ரூ.50-ஐ தாண்டி ரூ.53.44 ஆக உயர்ந்தது. அதன்பிறகு, இறங்காமல், ஏறுமுகத்திலேயே இருந்தது. இது எதில் போய் முடியுமோ? என்று எல்லோரும் ஏக்கத்துடனேயே பார்த்தனர். ஏனெனில் இந்திய ரூபாயின் மதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 21-ந்தேதி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.89-ஐ வரலாற்றிலேயே முதல் முறையாக தாண்டியவுடன் அதுவே அனைத்து பத்திரிகைகளிலும் முக்கிய செய்தியாகியது. நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.89.89 ஆக உயர்ந்துவிட்டது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்றாலும், இறக்குமதி செய்பவர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் அதிக தொகையை கொடுக்கவேண்டியது இருக்கும்.

இதுபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதிக பணம் செலவழிக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி ரூ.3.66 லட்சம் கோடியாக இருந்தது. இவ்வாறு ரூபாய் மதிப்பு குறைவதால் இந்தியாவுக்குதான் இழப்பு.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால்தான் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டு, வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்துவிட்டது. தங்கம் விலை அதிகமாக உயர்ந்ததையும் மற்றொரு காரணமாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் கடந்த 3 மாதங்களாக அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் இருந்து எடுத்து செல்லப்படுவதும், இப்போதைய நிலையை உருவாக்கிவிட்டது.

முதலீட்டாளர்கள் தங்கள் பாதுகாப்பான புகலிடமாக டாலரைத்தான் பார்க்கிறார்கள். இத்தகைய காரணங்கள்தான் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்பாடு உள்ள பணமாக ரூபாயை பார்க்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.89.89 ஆக இருக்கும் நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளவில்லையென்றால் ரூபாயின் மதிப்பு குதிரை பாய்ச்சலில் ரூ.100-ஐ தொடப்போவதை யாரும் தடுக்கமுடியாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் என்பது மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

1 More update

Next Story