முயற்சி திருவினையாக்கும்


முயற்சி திருவினையாக்கும்
x

பட்டம் பெறும் இளைஞர்கள் அனைவருக்குமே முதல் தேர்வாக இருப்பது இந்த அகில இந்திய குடிமை பணிகள்தான்.

மத்திய அரசாங்க பணியென்றாலும் சரி, தமிழக அரசு பணிகள் என்றாலும் சரி அதில் தலைமைப்பதவியில் இருப்பவர்கள் எல்லோருமே அகில இந்திய குடிமைப்பணி அதிகாரிகள்தான். ஆட்சிப்பணி, போலீஸ் பணி, வருவாய்ப்பணி உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் உயர்பதவிகளில் இவர்கள்தான் அங்கம் வகிப்பார்கள்.

படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் அனைவருக்குமே முதல் தேர்வாகவும், கனவுத்தேர்வாகவும் இருப்பது இந்த அகில இந்திய குடிமை பணிகள்தான். இதைத்தான் சிவில் சர்வீசஸ் பணி என்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை யு.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகளை நடத்தி அதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வுசெய்து, அவர்களை சொந்த மாநிலத்திலோ, வெளி மாநிலங்களிலோ பணியாற்ற நியமனம் வழங்குகிறது.

இந்த தேர்வுக்கான பயிற்சிகளை அளிப்பதற்காக நாடு முழுவதும் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் போல சில பயிற்சி மையங்கள் இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிந்தையில் உதித்து, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் நடந்துவரும் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் இந்த தேர்வுகளுக்காக இலவசமாக உறைவிடத்துடன்கூடிய பயிற்சி மட்டுமில்லாமல், உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த தேர்வுக்காக ஆயிரம் இளைஞர்கள் மதிப்பீட்டுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டது. இவர்களில் முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்ற 276 பேர் உள்பட 559 பேருக்கு முதன்மைத்தேர்வு எழுத தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டது. அவர்களில் 134 பேர் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர்.

இப்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அகில இந்திய அளவில் மொத்தம் 1,009 பேர் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 50 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்கள். அதாவது, '18 பேர் உறைவிட பயிற்சியும், மீதி 32 பேர் உதவித்தொகையும் பெற்று தேர்வுக்கு தயாரானார்கள்' என்று நான் முதல்வன் போட்டிப்பிரிவு சிறப்புத்திட்ட இயக்குனர் சுதாகரன் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் மகிழ்ச்சியென்றாலும், 2014-ம் ஆண்டு நடந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 119 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை ஒப்பிடும்போது, நாம் போகவேண்டிய தூரம், எடுக்கவேண்டிய முயற்சி இன்னும் நிறைய இருக்கிறது என்பது புலனாகிறது.

இந்த ஆண்டு நடந்த தேர்வு இன்றைய இளைஞர்களுக்கு 'முயற்சி திருவினையாக்கும்' என்ற பாடத்தையும் கற்பித்து கொடுத்திருக்கிறது. அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ள சக்தி துபே என்ற பெண் 5-வது முயற்சியிலும், 2 மற்றும் 3-வது இடத்தை முறையே பெற்ற ஹர்ஷிதா கோயல், பராக் ஆகியோர் 3-வது முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுபோல தமிழ்நாட்டில் முதல்இடத்தில் தேர்வான சிவசந்திரனும் 5-வது முயற்சியில்தான் வெற்றி பெற்றுள்ளார். சாதனை படைத்த மற்றவர்களும் இதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சியில்தான் வெற்றி பெற்றுள்ளனர். எனவே சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்தால் மனம்தளராமல், சோர்வடையாமல் மீண்டும் நன்கு தயார்படுத்திக்கொண்டு தேர்வு எழுதினால் வெற்றி இலக்கை அடையமுடியும் என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டு.

1 More update

Next Story