ஏமாறாதே ! ஏமாறாதே !

சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை ஏமாற்றி நாடு முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடியை பறித்துள்ளனர்.
மனித வரலாற்றில் கம்ப்யூட்டர் யுகம் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில சமூகவிரோத கும்பல்கள் பல மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களின் புதிய கண்டுபிடிப்புதான் டிஜிட்டல் கைது என்ற வார்த்தை ஜாலம். இதை பயன்படுத்தி பலரை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கான மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை ஒரு நொடியில் பறித்துவிடுகிறார்கள்.
குற்றவியல் சட்டப்படி டிஜிட்டல் கைது என்ற வார்த்தை எந்த சட்டத்திலும் இல்லை. இது எப்படி மோசடியாக நடத்தப்படுகிறது என்றால் திடீரென்று நமது செல்போனுக்கு ஒரு போனோ, குறுஞ்செய்தியோ அல்லது வீடியோ அழைப்போ வரும். அதில் வருபவர் நீங்கள் போதைப்பொருள் வழக்கு அல்லது பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்.
மேலும் நமது பெயரில் அனுப்பப்பட்டுள்ள ஒரு பார்சலில் சட்டவிரோத பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறுவார்கள். வீடியோ காலில் ஒரு போலீஸ் அதிகாரி சீருடையில் காவல் நிலைய பின்னணியில் இருப்பதாக காட்டி மிரட்டுவார்கள். டிஜிட்டல் கைதில் இருந்து ஜாமீன் வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என்று வங்கி கணக்கையும் சொல்வார்கள். அவர்கள் பேசும் அதிகார தோரணையால் மதி மயங்கி பயந்து போய் பணம் அனுப்பிவிடுவார்கள்.
சமீபத்தில் திருத்தங்கல்லில் வசிக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவருக்கு ஏர்டெல் செல்போன் கம்பெனியில் இருந்து அழைப்பதாக சரளமான ஆங்கிலத்தில் ஒருவர் பேசி பெங்களூருவில் சில சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட வகையில் உங்கள் செல்போன் எண் எங்களுக்கு கிடைத்தது. இது சம்பந்தமாக எங்கள் நிறுவனத்திடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக உங்களிடம் விசாரிக்க இருக்கிறார்கள்.
இணைப்பில் இருங்கள் என்று சொல்லிவிட்டு இன்னொருவரை அழைப்பில் இணைத்தார். அதில் பெங்களூரு காந்திநகர் காவல் நிலைய பின்னணியில் போலீஸ் அதிகாரி சீருடையில் ஒருவர் அதிகார தோரணையில் தோன்றி பேசினார். உங்களைப்பற்றி சில விவரங்கள் கிடைத்துள்ளது. அது சம்பந்தமாக விசாரிக்கப்போகிறேன் என்று சொன்னவுடன், அந்த பேராசிரியர் நான் பெங்களூருக்கு சமீபத்தில் சென்றதே கிடையாது. நீங்கள் சொன்னது எதுவும் எனக்கு புரியவில்லையே என்று சொன்னார்.
உடனே இது உங்களுடைய ஆதார் கார்டுதானே என்று அந்த போலி போலீஸ் அதிகாரி ஆதார் கார்டை காட்டியவுடன் அந்த பேராசிரியர் அதிர்ந்துபோனார். இந்த ஆதார் கார்டை வைத்து நீங்கள் பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று சொல்லி அவரிடம் இருந்து பணம் பறிக்க காய்களை நகர்த்தினார். இதை கேட்டு சந்தேகப்பட்ட அந்த பேராசிரியர் உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டு, செல்போனை ஆப் செய்துவிட்டார்.
சற்று நேரம் கழித்து அந்த எண்ணுக்கு உன் குட்டு வெளிப்பட்டுவிட்டது, போலீசாரை நாடியுள்ளேன், விரைவில் உன்னை தேடி போலீசார் வருவார்கள் என்று சொன்னதற்கு பிறகு அந்த எண்ணில் இருந்து பேராசிரியருக்கு அழைப்பே வரவில்லை. இதுகுறித்து மத்திய அரசாங்கம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒருபோதும் வீடியோ காலில் வந்து விசாரணையை நடத்தமாட்டார்கள். அப்படி யாராவது வந்து உங்களை பயங்காட்ட முயற்சித்தால் நான் முட்டாள் இல்லை என்று மட்டும் சொல்லுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகமும், சி.பி.ஐ.யும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை இந்த டிஜிட்டல் கைது என்ற வார்த்தையை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை ஏமாற்றி நாடு முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடியை பறித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. ஆக பொதுமக்களும் உஷாராக இருக்கவேண்டும். மத்திய-மாநில போலீசும், இதுபோல டிஜிட்டல் கைது என்று சொல்லும் மோசடி கும்பலை கண்டுபிடித்து வேரறுக்கவேண்டும்.






