கோவில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? - நயினார் நாகேந்திரன்

உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மதுரை கள்ளழகர் திருக்கோவிலின் உபரி நிதி ரூ.40 கோடியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்து திமுக அரசின் கொள்ளையைத் தடுத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
திருக்கோவில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது தெய்வக்குற்றமாகும் என்று சரியாகச் சுட்டிக்காட்டியதோடு, கோவிலைத் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று திமுக அரசுக்கு சவுக்கடியும் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
அறங்காவலர் குழுவே இல்லாமல் கோவிலை நிர்வகிப்பதில் தொடங்கி கமிஷன் பெறும் நோக்கில், கோவில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயிலாவது திருந்துமா என்பது கேள்விக்குறியே! கோவில் சொத்து கோவிலுக்கே என்பதை உணராமல், உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






