பெண்களுக்கு இனிப்பான செய்தி.. மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறது..!

2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை,
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது மகளிர் உரிமைத்தொகை திட்டம். திமுக தேர்தல் அறிக்கையிலேயே இந்த அறிவிப்புதான் கதாநாயகனாக அமைந்தது.
ஆனால், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்த உடன் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படவில்லை. நிதி நிலைமையை காரணம் காட்டி, திட்டம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எப்போது கொண்டுவருவீர்கள்? என்று மேடைக்கு மேடை பேசத் தொடங்கியது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
இதற்கிடையே, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில், விண்ணப்பித்தவர்களில் இருந்து பயனாளிகள் அடையாளம் காணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக, 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கியது. இதற்காக, மாதந்தோறும் ரூ.1,137 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
தொகை உயர்த்தப்படும்
இந்த நிலையில், பல பெண்கள் தங்களையும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும்" என்று அறிவித்தார்.
இனிப்பான செய்தி என்ன?
இந்த நிலையில், நேற்று திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வர இருக்கிறது" என்று கூறினார். அதாவது, மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்துவது தான் அந்த இனிப்பான செய்தி என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆனால், சட்டசபையில் வரும் 20-ந் தேதி கவர்னர் ஆற்றும் உரையில் அந்த அறிவிப்பு இடம்பெறுமா?, அல்லது தொடர்ந்து தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறுமா?, அல்லது திமுக தேர்தல் அறிக்கையில் தான் இடம்பெறுமா? என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.






