தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சாதனை செய்தால், அதை முறியடிக்க முடியாத சாதனையாக செய்வதே என் கொள்கை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 'உங்கள் கனவுகளை சொல்லுங்கள்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதவது;
"நாம் ஆட்சிக்கு வந்த காலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. மகளிர் உரிமைத்தொகை கொடுக்க முடியாது எனக்கூறினார்கள். 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வருகிறோம். இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்த முடியாது எனக்கூறினார்கள். அதையும் நிறைவேற்றினோம். 2 லட்சம் கோடி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளோம். 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியுள்ளோம்.
7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
நமக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்தது. பல்வேறு சிக்கல்கள் இருந்தும், தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம். பிற மாநிலங்களின் தலைநகரங்கள்தான் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள 2, 3ம் நிலை நகரங்களும் வளர்ந்து வருகிறது. சாதனை செய்தால், அதை முறியடிக்க முடியாத சாதனையாக செய்வதே என் கொள்கை.
திராவிட மாடல் ஆட்சியில் உங்கள் கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் திட்டம். இன்று முதல் 30 நாட்களுக்கு அரசின் குழு உங்களை சந்திப்பார்கள். அவர்களிடம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள். அவர்கள் அதனை பதிவு செய்வார்கள். அனைத்தையும் ஒருங்கிணைத்து மாபெரும் திட்டத்தை அறிவிப்போம். 2030 தொலைநோக்கு பார்வையுடன் அந்த திட்டம் இருக்கும்.
ஆட்சி என்பது, எனது கனவுகளை மட்டுமல்ல, வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதே. உங்கள் கனவுகளை நிறைவேற்றினால்தான் முன்னேற்றம் கிடைக்கும். நாடே திரும்பி பார்க்கும் நம்பர் 1 மாநிலமாக இருக்கிறோம். உங்கள் கனவுகளை, நிறைவேற்றுவேன். எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவேன். இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதி.”
இவ்வாறு அவர் பேசினார்.






