இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Nov 2025 6:11 PM IST
டிச.17ல் பாமக ஆர்ப்பாட்டம் - அன்புமணி அறிவிப்பு
பல மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் மறுக்கிறது. இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில்தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி டிச.17-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- 25 Nov 2025 5:38 PM IST
14 வயது சிறுமி வன்கொடுமை: 40 ஆண்டுகள் சிறை
ஈரோடு மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வம் என்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ல் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
- 25 Nov 2025 5:36 PM IST
கனமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்
டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
- 25 Nov 2025 5:19 PM IST
தமிழகத்தில் 59 சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
* தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் 96/85 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 3.78 கோடி வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* லட்சத்தீவில் 99.33 சதவீதம், கோவாவில் 82.67 சதவீதம் வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்கும் 12 மாநிலங்களில் மொத்தமாக 56.34 சதவீத பேரின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 25 Nov 2025 4:49 PM IST
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- வெறும் மாநிலங்களவை சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம். தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றார்.
- 25 Nov 2025 3:59 PM IST
எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணியாக சென்றார். மேற்கு வங்காளத்தின் பான்கான் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரசாருடன் நடைபயணம் மேற்கொண்டார் மம்தா பானர்ஜி. பாஜகவின் அஸ்திவாரத்தையே அசைக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார்.
- 25 Nov 2025 3:53 PM IST
பீகாரிகள் குறித்த கவர்னரின் குற்றச்சாட்டு பொய்: ரகுபதி
பீகாரிகள் குறித்து கவர்னர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை; தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் தவறான தகவலை தெரிவித்தார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார் கவர்னர் ரவி என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- 25 Nov 2025 2:46 PM IST
27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை - வானிலை மையம்
மலாக்கா ஜலசந்தியில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இல்லை. 26, 27ஆம் தேதிகளில் புயலாகும் எனக் கூறியிருந்த நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தகவல் தெரிவித்துள்ளார்.
















