இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Dec 2025 11:26 AM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
1,300 விமானங்களை கையாளும் திறன் கொண்ட டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Dec 2025 11:24 AM IST
கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மைதானத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறிதுநேரம் ஆக்கி விளையாடினார்.
- 30 Dec 2025 10:45 AM IST
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 30 Dec 2025 10:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் டக் பிரேஸ்வெல் அறிவித்துள்ளார்.
- 30 Dec 2025 10:44 AM IST
‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்...’ என நெதன்யாகு சந்திப்பின்போது டிரம்ப் மீண்டும் பேசினார்.
- 30 Dec 2025 9:57 AM IST
இன்றைய தங்கம் விலை:-
இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:-
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளியின் விலை போட்டிப்போட்டு உயர்ந்து கொண்டு வந்த நிலையில், விலை குறைந்து வருவது நகை பிரியர்கள், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
- 30 Dec 2025 9:29 AM IST
திருத்தணி முருகன் கோவிலுக்கு 3 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை
திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 31-ந்தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு தரிசனமும் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
- 30 Dec 2025 9:27 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 3 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
- 30 Dec 2025 9:26 AM IST
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக ரத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.













