இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Dec 2025 9:27 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 3 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
- 30 Dec 2025 9:26 AM IST
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக ரத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 30 Dec 2025 9:20 AM IST
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
- 30 Dec 2025 9:19 AM IST
மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
- 30 Dec 2025 9:18 AM IST
திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய, ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.











