இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
x
தினத்தந்தி 3 Jan 2026 9:00 AM IST (Updated: 3 Jan 2026 6:04 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 3 Jan 2026 6:04 PM IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

    இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனையாகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

  • 3 Jan 2026 5:15 PM IST

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - மத்திய மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம்

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

  • 3 Jan 2026 4:45 PM IST

    வெனிசுலா மீது தாக்குதல் - அமெரிக்காவுக்கு ரஷியா, ஈரான் கண்டனம் 

    வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் சாக்குப்போக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

  • 3 Jan 2026 3:37 PM IST

    ‘வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்’ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு  

    வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

  • 3 Jan 2026 1:47 PM IST

    வெனிசுலா மீது தாக்குதல்

    வெனிசூலா மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அதிபர் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் கராகஸ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார். வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • தூய்மை பணியாளர்கள் கைது
    3 Jan 2026 11:22 AM IST

    தூய்மை பணியாளர்கள் கைது

    சென்னையில் போராட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார்மயமாதலை கண்டித்தும், பணி நிர்ந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 1 முதல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

  • 3 Jan 2026 10:16 AM IST

    புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு ரக மதுபானங்களை விரும்பி வாங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story