தி.மு.க. அரசுக்கு பாராட்டு தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்

காலில் போடும் காலணி முதல் மடிக்கணினி வரை இன்றைக்கு அரசே கொடுத்து படிக்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:-
மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு இன்றைக்கு அரசு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் படிக்கும்போது நோட்டு, புத்தகம், சைக்கிள்களை எல்லாம் நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளிக்கு நாங்கள் சைக்கிளில் போனால் சட்டை காலரை தூக்கி விட்டுப்போவோம். ஏனெனில் ஒரு சிலரிடம் தான் சைக்கிள் இருக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள மாணவர்களுக்கு சைக்கிள், பஸ்பாஸ், புத்தகம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது.
அதுபோல் நோட்டு, பேனா, பென்சில், புத்தகபை, வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்து கல்வி உபகரணங்களையும் அரசே வழங்குகிறது. காலில் போடும் காலணி முதல் மடிக்கணினி வரை இன்றைக்கு அரசே கொடுத்து படிக்க வைக்கிறது. இந்த காலத்து மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவ-மாணவிகள் சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக வேண்டும்.
படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறந்த திட்டம். உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இதனைப் பார்த்துதான், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தமிழகத்தில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தாலும், தற்போது அது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
நல்லவேளையாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நல்ல மனசு தி.மு.க. அரசுக்கு கடைசி காலத்திலாவது வந்து இருக்கிறது. அது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.






