திமுக ஆட்சியை அகற்ற கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


தினத்தந்தி 23 Jan 2026 4:39 PM IST (Updated: 23 Jan 2026 6:36 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது மத்திய அரசு என்று பிரதமர் மோடி கூறினார்.

சென்னை,

சென்னை மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் நிறைவாக பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழகத்திற்கு எனது முதல் பயணம் இது. சில நாட்களுக்கு முன்பு தான் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை நாம் கொண்டாடினோம். ஏரி காத்த ராமரின் திருவடிகளில் வணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள். நேதாஜியோடு தோள் சேர்த்து வீரர்கள் பலர் இந்திய சுதந்திரத்துக்காக போராடினார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

இங்கே அலைகடல் என மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு சேதியை அளிக்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. தி.மு.க.வின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விரும்புகிறது. மேடையில் உள்ள நண்பர்கள் ஒரே உறுதிப்பாட்டில் இங்கே கூடியுள்ளனர். அது தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான். தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது.

ஆட்சி கட்டிலில் தி.மு.க.வுக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால், தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். ஆற்றிய பணிகள் ஜீரோ. தி.மு.க. அரசு சி.எம்.சி. அரசு. அதாவது, கலைக்‌ஷன், மாபியா, ஊழல் அரசாங்கம் நடத்துகின்றனர். தி.மு.க.வை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் தீர்மானம் செய்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் இன்று எப்படிபட்ட அரசாங்கம் இருக்கிறது தெரியுமா. ஜனநாயகம் இல்லை. நம்பகத்தன்மை இல்லை. ஒரே குடும்பத்துக்காக இயங்குகிறது. 4 பாதை உள்ளது. வம்சாவளி பாதை, ஊழல் பாதை, பெண்களை வசைபாடுவது, கலாசாரத்தை வசைபாடுவது ஆகும். தி.மு.க.வின் ஊழல் பணம் யாருக்கு செல்கிறது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்.

தமிழ்நாடு எப்படிபட்ட பூமி என்றால், பாரத நாட்டை வளம் நிறைந்ததாக மாற்றியது. கவுரவத்தை உயர்த்தியது. தி.மு.க.வின் கொடூரமான களைகளில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறுகிறதோ, அந்த அளவுக்கு தேசமும் முன்னேறும்.

கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசாங்கம் தமிழக வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை ஆற்றியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.3 லட்சம் கோடியை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இது கடந்த அரசைவிட 3 மடங்கு அதிகம். ரூ.11 லட்சம் கோடிக்கான உதவிகளை அளித்துள்ளது. ரெயில்வே பட்ஜெட் பற்றிய எடுத்துக்காட்டு அளிக்கிறேன். அவர்கள் ரெயில்வே பட்ஜெட் மூலம் தமிழகத்திற்கு அளித்ததைவிட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 8 மடங்கு அதிகம் வழங்கியுள்ளது. 80 ரெயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் மீனவர்கள்தான். தேசத்தின் விவசாயம், மீன் வளத்துறையில் சாதனையை எட்டியுள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் மத்திய அரசு ஆதரவாக இருந்து வருகிறது. மத்திய அரசின் மூலம் இப்போது வரை தேசத்தின் விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதை உலக சந்தைக்கு கொண்டு சேர்க்க கடும் முயற்சியை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.

தமிழக வளர்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தி.மு.க. அரசு இளைஞர்களை போதை குடும்பலிடம் ஒப்படைத்துவிட்டது. அவர்களை மீட்டெடுக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் உடல்நலமே முக்கியம். தமிழகத்தை மாற்றியமைக்கும். இன்று பாரதம் உலக முதலீட்டாளர்கள் விருப்பமாகிவருகிறது. பெரிய ஒப்பந்தங்களை பாரதம் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்கு இரட்டை என்ஜின் அரசாங்கம் தேவை. மத்திய அரசோடு இணைந்து பணியாற்றும் அரசாங்கம் இங்கு எப்போது வருகிறதோ, அப்போதுதான் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள்.

தமிழ்நாட்டில் குற்றங்களால் மோசமான பாதிப்பு பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. ஜெயலலிதா குற்றங்களை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டார். நான் பெண்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இங்கே தேசிய ஜனநாயக கூட்டணி அரசே அமைத்துதாருங்கள். உங்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

தமிழக இளைஞர்களை போதைப்பொருள் மாபியாவிடம் ஒப்படைத்துவிட்டது திமுக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாபியா கும்பல் செழிப்பாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் மாபியா ஒழிக்கப்படும். தமிழத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கப்படுகிறது. பெண்களின் வசதிக்காக இது செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், வரலாற்று பங்களிப்பு எப்போதும் என்னுள் பாசத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. நான் காசி நாடாளுமன்ற உறுப்பினர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைத்துள்ளோம். காசியில் பல பிள்ளைகள் தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தமிழ் கலாசாரம் பற்றி வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. முருகப்பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்டபோது, நமது தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், தி.மு.க.வும், கூட்டாளிகளும் வாக்கு வங்கிகளை குஷிப்படுத்த நீதிமன்றங்களை கூட விட்டுவைக்கவில்லை, அவமானப்படுத்தினார்கள். தமிழ் கலாசாரத்தின் எதிரி தி.மு.க.

காங்கிரஸ், திமுகவினர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார்கள். பா.ஜ.க. அரசு சட்ட ரீதியில் ஆராய்ந்து தமிழக பாரம்பரியத்தை மீட்டுக்கொடுத்தது. அனைத்து வகையிலும் உங்களுக்கு துணை நிற்போம். தமிழகத்திற்கு திறமைகள் ஏராளம் உள்ளன. எப்படிபட்ட அரசாங்கம் தேவை. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க திமுக - காங்கிரஸ் அரசு காரணம். சட்டசிக்கலை நீக்கி ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணம் என்.டி.ஏ அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story