சண்டே ஸ்பெஷல்: மணக்க, மணக்க.. சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான, மணமான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 400 கிராம் (2 கப்)
சிக்கன் - 500 கிராம்
தயிர் - அரை கப்
பெரிய வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பேஸ்ட்)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பேஸ்ட்)
பச்சை மிளகாய் - 3
புதினா - ஒரு கைப்பிடி
மல்லி இலை - ஒரு கைப்பிடி
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா தயாரிக்க...
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
நட்சத்திர சோம்பு - 1
ஜாவித்ரி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்,
மல்லி - 2 டீஸ்பூன்
(மேற்கண்ட மசாலாவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு பொடியாக திறித்து வைத்துக்கொள்ளவும்)
செய்முறை
முதலில் அடுப்பில் தீ பற்றவைத்து குக்கரை வைக்கவும். அதில் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி சூடாக்கவும். அதன் மீது பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, வெட்டி வைத்த பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். பெரிய வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும். அதன்பிறகு, கீறிவைத்த பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போன உடன் பிரியாணி மசாலாவை சேர்க்கவும்.
தொடர்ந்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும். வெட்டி வைத்த பெரிய தக்காளியையும் சேர்க்கவும். தக்காளி வதங்கி பேஸ்டாக வேண்டும். அதன்பிறகு புதினா, மல்லி இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறிவிட்டு, தயிர் சேர்க்கவும். மறுபடியும் கிளறவும். அரை கிலோ சிக்கனை சேர்த்து 6 நிமிடம் வேகவிடவும். அதன்பிறகு, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து, 400 கிராம் பாஸ்மதி அரிசியையும் (அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தது) சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதன்பின்னர் குக்கரை மூடவும். மிதமான சூட்டில் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். அதன்பிறகு 15 நிமிடங்கள் கழித்து குக்கர் மூடியை திறக்கவும். மணக்க, மணக்க.. சிக்கன் பிரியாணி ரெடி.






