ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக சட்டசபையில் இன்று சிறப்பு தீர்மானம்

கோப்புப்படம்
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
கிராமப்புற வேலைவாய்ப்புக்காக கடந்த 2005-ம் ஆண்டு, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ (MGNREGA) கொண்டு வரப்பட்டது. அதில், தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது. இது 100 நாள் வேலைத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மாற்ற வகை செய்யும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை (VB-G RAM G) மத்திய மந்திரி சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயர்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதியளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதியளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த விவாதத்தின்போது, "100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்,150 நாட்களாக உயர்த்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தோம். அதை மறுக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் அதனை நிச்சயமாக நிறைவேற்றி இருப்போம்.
மத்தியில் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி தான் வருகிறோம். இது தொடர்பாக சட்டசபையில் நாளை (இன்று) தீர்மானம் கொண்டுவர உள்ளோம்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.






