பொங்கல் விடுமுறை: கோவை செம்மொழி பூங்காவை கண்டு மகிழ்ந்த 1 லட்சம் மக்கள்

செம்மொழி பூங்காவில் பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பாளவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில்பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும், பள்ளி, மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம் , கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் மற்றும் செடிகளை கொண்ட செம்மொழி வனம், நறுமண வனம், ஐந்திணை வனம், நலம் தரும் வனம், மலர்வனம், புதிர் வனம், நிழல் வனம், 1000-த்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம்,பாறை தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பாளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை நாட்களான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று 23,819 நபர்களும், 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று 31,744 நபர்களும், 17.01.2026 (சனிக்கிழமை) அன்று 25,848 நபர்களும் மற்றும் பொது விடுமுறை நாளான 18.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 18,743 நபர்களும், ஆகிய 4 நாட்களில் மொத்தம் 1,00,154 எண்ணிக்கையிலான ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






