வள்ளியூர் அருகே பொங்கல் விளையாட்டுகள் கோலாகலம்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

45 கிலோ, 60 கிலோ இளவட்டக்கற்களை ஆண்களுக்கு இணையாக பெண்களும் தூக்கி அசத்தினர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
45 கிலோ, 60 கிலோ, 95 கிலோ, 129 கிலோ எடை கொண்ட இளவட்டக் கற்களை தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். உரலை தலைக்கு மேலே தூக்கி ஒற்றைக்கையால் நீண்ட நேரம் நிறுத்தி வைத்தவர்களும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
45 கிலோ, 60 கிலோ இளவட்டக்கற்களை ஆண்களுக்கு இணையாக பெண்களும் தூக்கி அசத்தினர். இளவட்டக்கல்லை தூக்கி தோளில் வைத்து தலையைச் சுற்றி அதிகமுறை கொண்டு வந்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பெண்கள் பிரிவில் 60 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தூக்கி 26 தடவை தலையைச் சுற்றி கொண்டு வந்த ராஜகுமாரி முதல் பரிசு பெற்றார். லெஜின் 2-ம் பரிசு வென்றார். ஆண்கள் பிரிவில் 129 கிலோ இளவட்டக்கல்லை தூக்கிய ஜெப ஜென்சன் முதல் பரிசும், புவின் 2-ம் பரிசும், மகேந்திரன் 3-ம் பரிசும் வென்றனர்.






