திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி


திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 9 Nov 2025 7:54 PM IST (Updated: 9 Nov 2025 9:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம். பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம்; தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

சென்னை அசோக் நகரில் காவல் நிலையம் அருகே 38 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு தலைவியின் கணவர் பள்ளியின் அனைத்து சாவிகளையும் வைத்துக்கொண்டு, பள்ளி வகுப்பறைகளை தவறாகப் பயன்படுத்தியது.

இம்மாதம், கடலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி கண்ணபிரான் பாண்டியன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல் வாகனத்தில் ஏற்றியபின் ரவுடியின் ஆதரவாளர்கள் காவல் வாகனத்தை பின்தொடர்ந்ததால், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நெல்லை காவலர்கள்.

நவம்பர் 1-ஆம் தேதி இரவு முதல்-அமைச்சரின் தொகுதியான கொளத்தூரில், கஞ்சா போதையில் இளைஞர்கள் தெருவில் சென்றவர்களைத் தாக்கிய சிசிடிவி காட்சியை வெளியிட்ட வீட்டு உரிமையாளர்களைக் கைது செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. வீடுகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் சிசிடிவி வைக்க காவல்துறை அறிவுறுத்திய நிலையில், சிசிடிவி-யில் பதிவாகி உள்ள ரவுடிகளின் அட்டகாசத்தை வெளியிட்டால், ரவுடிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, வீட்டு உரிமையாளர்களை மிரட்டுவதா காவல் துறையின் மரபு ? இதுபோல் செய்தால் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல யார் முன்வருவார்கள்? இதுதான் முதல்-அமைச்சர் தலைமை வகிக்கும் காவல் துறையின் லட்சணமா?

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது.

இன்றைய நாளிதழ்களில், தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கிடையே போதை மருந்து கடத்தல் மாபியாவின் கிங்பின் என்று கருதப்படும் செனகல் நாட்டு பிரஜை பென்டே என்பவனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது.

இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக 'Compromise' செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, 'சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது'. புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்திலும்; தொடர்ந்து எனது தலைமையிலான அம்மா அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story