காதல் பிரச்சினையில் வாலிபர் வெட்டிக் கொலை - 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெரு அருகில் உள்ள பாலன் நகரை சேர்ந்தவர் சந்துரு (வயது 26). பெயிண்டர். நேற்று இரவு இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று சந்துருவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சந்துருவின் தங்கையை புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் திடீரென இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்த வாலிபரின் தம்பி மற்றும் நண்பர் ஒருவர் சேர்ந்து சந்துருவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.






