கரூர் சம்பவம்: 12-ந்தேதி சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்


கரூர் சம்பவம்: 12-ந்தேதி சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்
x

விஜய் வருகிற 11-ந்தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய கோர சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கரூரில் முகாமிட்டு விசாரணை தொடங்கிய சி.பி.ஐ. குழுவினர் அங்குள்ளவர்களிடமும், த.வெ.க. நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினர். போலீஸ் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை கேட்டு பதிவு செய்தனர். இதற்கிடையே, அடுத்த கட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த 29-ஆம் தேதி ஆஜரானார்கள். அதேபோல், கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள். முதல் நாளில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரமும், 2-வது நாளில் 7 மணி நேரமும் விசாரணை நடந்தது. மூன்றாவது நாளில், அதாவது 31-ஆம் தேதி, சுமார் 3 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. இந்த 3 நாட்கள் விசாரணையிலும் த.வெ.க. நிர்வாகிகளிடம் கரூர் கொடூர சம்பவம் குறித்த நிகழ்வுகள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த 6-ந்தேதி சி.பி.ஐ. தரப்பில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிபிஐ-யின் சம்மனை ஏற்று விஜய் வரும் 12-ம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக உள்ளார். இதற்காக விஜய் வருகிற 11-ந்தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story