சூரியூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஜல்லிக்கட்டுக்கான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்-அமைச்சர் சிறு விளையாட்டரங்கம் - ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, வாடிவாசலில் கோவில் காளைகளை கொடியைசைத்து வழியனுப்பினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-
பெருமை வாய்ந்த சூரியூர் மண்ணில் நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள முதல்-அமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை.
சூரியூர் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மண் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரியும். திருச்சிக்கு எப்படி மலைக்கோட்டை ஓர் அடையாளமோ, திருச்சிக்கு எப்படி காவிரி ஆறு ஓர் அடையாளமோ, அதே மாதிரி, சூரியூர் ஜல்லிக்கட்டும் திருச்சிக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. சூரியூர் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு, இந்த நிரந்தர அரங்கத்தில் நாளை நடக்க இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சூரியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ரிங்ரோடு பணிகளை நாம் முடித்து காட்டியிருக்கின்றோம்.
ஜல்லிக்கட்டுக்கான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்தில் இருக்கிற புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சிவகங்கை, மதுரையில் இருந்தும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் இங்கே வந்து போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
அதனால், திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்துக்கே பயன்படக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






