சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
காலமுறை ஊதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது, அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை இரும்பு தடுப்புகள் கொண்டு போலீசார் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசின் மீதுள்ள நல் எண்ண அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும், காலவரையற்ற சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை அரசு பரிசளித்து அறிவிப்பு வெளியிடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.






