4 முனைப்போட்டி மும்முனையானால்.. விஜய் போடும் புது தேர்தல் கணக்கு..!

"வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்று மாற்றி யோசித்த த.வெ.க. தலைமை, 40 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்ற நிலை நீடிக்கிறது.
தி.மு.க. தனது கூட்டணியை கடந்த சட்டசபை தேர்தலில் (2021) இருந்ததுபோல வலுவாக வைத்துள்ளது. தற்போது, கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில், பா.ம.க. (அன்புமணி அணி), த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சியை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் இல்லை
தி.மு.க. கூட்டணியில் இணைந்தால், பா.ம.க.வுக்கு (ராமதாஸ் அணி) 4 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 6 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நேற்று தி.மு.க. அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அவர் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காத நிலையில், பா.ஜ.க. தரப்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தலைக்கு மேல் 'கத்தி'
இந்த நிலையில், "ஆட்சியில் பங்கு தருவோம்" என்ற வாக்குறுதியுடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் இணையவில்லை. இதனால், "வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்று மாற்றி யோசித்த த.வெ.க. தலைமை, 40 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.
இந்தக் கணக்கையே கட்சியின் தலைவர் விஜய்யிடமும் நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை, சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியாவதில் சிக்கல் என தலைக்கு மேல் 'கத்தி' தொங்கிக் கொண்டு இருப்பதால், தேர்தலில் தோற்றால் கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கூறிவருகின்றனர்.
விஜய் புதிய முடிவு
இதனால், நடிகர் விஜய் புதிய முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலை பொறுத்தவரை தற்போதைய நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்கள் விஜய், சீமான் ஆகிய 2 பேர்தான். ஆனால், சீமான் தனித்து போட்டி என்றே கூறிவருகிறார். கூட்டணி குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகேட்டபோதுகூட, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலையை சுட்டிக்காட்டி, தான் தனித்துதான் போட்டி என்பதை உறுதிப்படுத்திவந்தார்.
இந்த நிலையில்தான், த.வெ.க. தலைவர் விஜய், தனது நெருங்கிய திரைத்துறை நண்பர் ஒருவர் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
யோசிக்கும் சீமான்
"நாம் இருவரும் தனித்தனியாக நின்றால், கணிசமான வாக்குகளைத்தான் பெற முடியும். தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றால், இருவரும் இணைந்த கைகளானால் மட்டுமே அது சாத்தியம்" என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், உடனே பதில் எதுவும் சொல்லாத சீமான், யோசிக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலில் சீமானை தனித்து களம்காணச் சொல்லியே ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது மும்முனை போட்டியாக குறைந்தால், அதாவது விஜய் - சீமான் கைகோர்த்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அரசியல் நகர்வு
மேலும், த.வெ.க. கூட்டணியில், பா.ம.க. (டாக்டர் ராமதாஸ் அணி), ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. ஆகியவற்றை இணைக்கவும் தூதுவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. "தேர்தல் சமயத்தில் அரசியலில் எதுவும் நடக்கலாம்" என்ற வகையில், தமிழக அரசியல் நகர்வுகள் தற்போது பரபரப்பாக இருந்து கொண்டிருக்கிறது.






