கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் - ஜி.கே.வாசன்


கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x

கோப்புப்படம் 

கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் இணைக்காத தமிழக அரசின் செயல் முறையற்றது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்கும், கிராமப்புறங்களில் நடைபெற வேண்டிய அடிப்படைப்பணிகள் பாதிக்கப்படுவதற்கும் காரணம் தமிழக அரசு. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கிராமப்புற பணிகளை மேற்கொண்டு வருவது மிகவும் முக்கியமானது.

குறிப்பாக சாலைப்பணி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரித்தல், வரி வசூல் உள்ளிட்ட கிராமப்புறம் சார்ந்த அரசின் பணிகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள். அந்தந்த ஊராட்சிகளின் நிர்வாகப்பணிகள் அனைத்தும் ஊராட்சி செயலாளர்களின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அத்தகைய ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது போதுமானதல்ல.

மேலும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவு எழுத்தர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் வேளையில் பதிவு எழுத்தர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்துள்ளபோது, கிராம ஊராட்சி செயலாளர்களையும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் இணைக்காத தமிழக அரசின் செயல் முறையற்றது.

இந்த நிலையில் கிராம ஊராட்சி செயலாளர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு மனு அளித்து நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் கடந்த 5 நாட்களாக ஆர்ப்பாட்டம், முற்றுகை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு அவர்களின் கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததும் கண்டிக்கத்தக்கது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகின்றது. உதாரணத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் 20 பணியிடங்கள் காலியாக உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சிலரைத் தவிர 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் ஊராட்சி மன்ற அலுவலகம் மூடியுள்ளது.

போராட்டம் நீடிப்பதால் கிராமப்புறம் சார்ந்த குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வீட்டு வரி வசூல், சொத்து வரி வசூல், கட்டிட அங்கீகாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொங்கல் வருகின்ற வேளையில் கிராமப்புறம் சார்ந்த அடிப்படையான, அத்தியாவசியமான, அவசரமான பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் தமிழக அரசு இந்த முக்கியப் பிரச்சனையை கண்டுகொள்ளாதது நியாயமில்லை.

எனவே தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உடனடியாக இணைக்கவும், ஏற்கனவே ஓய்வுபெற்ற கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story