சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்


சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை போட்டு, மக்களை ஏமாற்ற கிளம்பிவிட்டார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 65,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பணிப் பாதுகாப்பும், முறையான ஓய்வூதியமும் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி 313-ல் கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள். இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று, திமுக கொடுத்த பல நூறு போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் பசி தீர்க்கும் சத்துணவு ஊழியர்களே. பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களின் மீது, கைது நடவடிக்கை என அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு உரைக்கவில்லையா? நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தானே அவர்கள் நிறைவேற்றக் கேட்கிறார்கள். முறையான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட உங்களுக்கு நேரமில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு, நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story