16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை


16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை
x

திருச்செந்தூர் பகுதியில் 16 வயது சிறுமியை தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள், தங்கபாண்டியிடம் கேட்டபோது தங்கபாண்டியின் மகளான தூத்துக்குடியைச் சேர்ந்த வேதசெல்வி(42) மற்றும் மகனான ராஜா(34) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்சொன்ன பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று தங்கபாண்டி குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் குற்றவாளிகள் வேதசெல்வி மற்றும் ராஜா ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரசீதா, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

1 More update

Next Story