கூட்டணிக்கு வர தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் இத்தனையா..? - தி.மு.க., அ.தி.மு.க. அதிர்ச்சி


கூட்டணிக்கு வர தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் இத்தனையா..? - தி.மு.க., அ.தி.மு.க. அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Jan 2026 10:44 AM IST (Updated: 24 Jan 2026 10:44 AM IST)
t-max-icont-min-icon

4-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் தே.மு.தி.க.,, இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடங்கிவிடும்.

அதற்கு முன்னதாக, தேர்தலில் களம் காண விரும்பும் அரசியல் கட்சிகள் எல்லாம், கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்து, வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4 முனைப்போட்டி

அப்போதுதான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு, வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்க முடியும். இந்த முறை தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.

ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, த.வெ.க. தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

பலம் வாய்ந்த தி.மு.க. கூட்டணி

தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலின்போது உள்ள கூட்டணியைவிட கூடுதலாக இப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கைகோர்த்துள்ளது.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில், பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட சிறிய கட்சிகளும் பல இணைந்துள்ளன.

கூட்டணியை முடிவு செய்யாத தே.மு.தி.க.

ஆனால், 2006-ம் ஆண்டு முதல் 3 முறை சட்டசபை தேர்தலில் களம் கண்ட தே.மு.தி.க., 4-வது முறையாக போட்டியிட இருக்கும் நிலையில், இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இரு தரப்பிலும் 30 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வேண்டும் என்று தே.மு.தி.க. அதிர வைத்தது. மேலும், தேர்தல் செலவுக்கும் தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க., அ.தி.மு.க. கறார்

ஆனாலும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சுதாரித்துக்கொண்டு, "தே.மு.தி.க.வுக்கு ஆரம்பத்தில் இருந்த வாக்கு சதவீதம் 10.5. ஆனால் இப்போது ஒரு சதவீதத்திற்கும் கீழ் வந்துவிட்டது. மேலும், முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர். எனவே, அதிகமான தொகுதிகள் எல்லாம் தரமுடியாது" என்று கறாராக கூறிவிட்டதாம்.

அதன்பிறகு, படிப்படியாக இறங்கி வந்த தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இறுதியாக இரட்டை இலக்கத்தில் தொடக்க எண்ணான 10 விரலை காட்டி நிற்கிறாராம். ஆனால், தி.மு.க. தரப்பில் 6 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட்டும், அ.தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள், மாநிலங்களவை சீட்டை பிறகு பேசலாம் என்றும் கூறப்பட்டு வருவதாக தெரிகிறது.

காங்கிரஸ் வெளியேறுமா?

இதனால், இன்னும் தே.மு.தி.க. தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது. கடலூரில் கடந்த 9-ந் தேதி நடந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, "கூட்டணி முடிவாகிவிட்டது. நாம் சேரும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. ஆனால், ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இன்னும் அறிவிக்காதபோது நாம் ஏன் அறிவிக்கவேண்டும்" என்று கூறி, தொண்டர்களை மேலும் காக்க வைத்தார். ஆனால், இப்போது வரை தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்யவில்லை.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், இன்னும் கூடுதல் தொகுதிகள் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிர்ந்துபோன பா.ஜ.க.

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக, கூட்டணியை இறுதி செய்வதற்காக மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், 2 நாட்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்தார்.

டெல்லியில் இருந்து அவர் புறப்படும் முன்பே தொலைபேசியில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால், பா.ஜ.க.வே அதிர்ந்து போய்விட்டதாம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வே இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லையே என்று கூறி, அத்துடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும் முடித்து கொண்டுவிட்டதாம். இனி, தே.மு.தி.க. இறங்கி வந்தால் மட்டுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருதரப்பிலும் கூட்டணி கதவுகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.

1 More update

Next Story