நெல்லையில் டிஜிட்டல் அரெஸ்ட்: பாண்டிச்சேரியை சேர்ந்தவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சி.பி.ஐ. (CBI) லிருந்து பேசுவதாகவும் உங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றம் எனவும் இது சம்பந்தமாக தங்களை விசாரிக்க வேண்டி உள்ளது எனவும், நீங்கள் எப்பொழுதும் தொடர்ந்து எங்களது வீடியோ காலில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறி Digital Arrest செய்துள்ளனர்.
மேற்சொன்ன சம்பவங்களை உண்மை என நம்பி சட்டவிரோத பரிவர்த்தணைகளை சரி பார்ப்பதாகக் கூறி அந்த நபரின் வங்கி சேமிப்பு பணத்தை அவர்கள் சொல்லும் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து டிஜிட்டல் அரெஸ்ட் செய்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அந்த நபர் அனுப்பிய பணமானது பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ஹென்றி ஜோன்ஸைப் பிடித்து விசாரிக்கையில் தான் 5 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வங்கி கணக்கை தொடங்கி அதை மற்றொரு நபருக்கு விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மேற்சொன்ன நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்சொன்னபடி வங்கிக் கணக்கை ஆரம்பித்து பணத்திற்காக வாடகைக்கு கொடுத்த பாண்டிச்சேரி ஹென்றி ஜோன்ஸை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.
எனவே தெரிந்த மற்றும் தெரியாத நபருக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ அதன் பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிட்டல் அரெஸ்ட் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது என்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் சைபர் கிரைம் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச தொலைபேசியின் வழியாகவோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






