சிபிஐ விசாரணை: நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்

டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது
சென்னை,
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கரூரில் பொதுமக்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று நாள் விசாரணையிலும் அவர்கள் பங்கேற்று ஆதாரங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி, வரும் 12ஆம் தேதி (நாளை) ஆஜராகும்படி உத்தரவிட்டது.
டெல்லியில் நாளை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம், கரூர் சம்பவம் தொடர்பாக பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார். டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் நாளை டெல்லி செல்ல இருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.






