விவசாய தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பேரவைத் தீர்மானம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 2004 ஆம் ஆண்டில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள உடல் உழைப்பு மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் சட்டபூர்வ உரிமை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்றியது.
இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14 கோடி குடும்பங்களும், 24 கோடி தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி சமூக சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 5 ஆயிரம் கோடி மனித வேலை நாட்கள், வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை நிலை தணிந்து, குறைந்தபட்ச ஊதியம் உயர்ந்துள்ளதுடன், வேலை தேடி புலம் பெயர்ந்து செல்லும் அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிமை அடிப்படையிலான சட்டத்தை நீக்கி விட்டு, ஒன்றிய அரசை சார்ந்து வாழும் பயனாளர்களாக மாற்றும் விபி ஜிராம்ஜி திட்டம் நடைமுறை பயனற்றது என்பதால் நாடு முழுவதும் ஊரகத் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் இன்று (23.01.2026) தமிழ்நாடு சட்டப் பேரவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்தத் தீர்மானத்தை ஏற்று, விபி ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






