பொங்கல் பண்டிகையையொட்டி பொருநை அருங்காட்சியகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு குவிந்தனர்.
உலகின் மூத்த முன்னோடி தமிழர்கள்தான் என்பது தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற அரிய பொருட்களை நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு குவிந்தனர். நேற்று முன்தினம் வரை பொருநை அருங்காட்சியகத்தை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்திலும் மாலையில் 100 கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.






